முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சிலர் பண பசுவாக பயன்படுத்தினர்.. மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

 
பி.எஸ்.என்.எல்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சிலர் பண பசுவாக  பயன்படுத்தினர் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் பேசுகையில் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்காக ரூ.1.64 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு பெரிய திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இது தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடும் பொதுத்துறை  நிறுவனத்தை (பி.எஸ்.என்.எல்.) முழுவதுமாக மாற்றும். பி.எஸ்.என்.எல். மிகவும் மோசமான கட்டத்தை கடந்து சென்றது.  

அஸ்வினி வைஷ்ணவ்

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சில அரசியல் கட்சிககள் காரணமாக நிறைய நிதிகள் வேறுபக்கம் திருப்பி விடப்பட்டன. காலம் மாறி விட்டது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா முயற்சியின்படி, பி.எஸ்.என்.எல். விரைவில் 4ஜி மற்றும் 5ஜி  நெட்வொர்க்குகளை நாட்டில் வடிவமைத்து உருவாக்கும். சில (முன்னாள்) அமைச்சர்கள், எதிர்பக்கம் அமர்ந்திருக்கும் மக்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பண பசுவாக பயன்படுத்திய காலங்கள் போய்விட்டன. 

மோடி

தற்போது ஒரு ஜி.பி. டேட்டா ரூ.20க்கும் குறைவாகவே  இருப்பதால், இந்தியாவில் மொபைல் தரவு உலகின் மலிவான  ஒன்றாகும். இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சுமார் ரூ.200ஆக இருந்தது. பி.எஸ்.என்.எல். சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கும் புதிய மூலதனத்தை முதலீடு செய்வதில் புத்துயில் நடவடிக்ககைள் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.