மீண்டும் ஷிண்டே ராஜ்ஜியம்.. ஜெய்தேவ் தாக்கரேவின் பேச்சில் அரசியல் அர்த்தம் உள்ளது.. பா.ஜ.க.வை சீண்டிய தேசியவாத காங்கிரஸ்

 
ஜெய்தேவ் தாக்கரே (கை கூப்பி வணங்குபவர்)

மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தல் மற்றும் ஷிண்டே ராஜ்ஜியம்  நிறுவப்பட வேண்டும் என்ற ஜெய்தேவ் தாக்கரேவின் அறிக்கை அரசியல் அர்த்தத்தை கொண்டுள்ளது என்று மறைமுகமாக ஷிண்டேவின் சிவ சேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தேசியவாத காங்கிரஸ் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு  பிரிவு, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவு என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மகாராஷ்டிரா  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு நேற்று முன்தினம் நடத்திய தசரா கொண்டாட்ட கூட்டத்தில், உத்தவ் தாக்கரேவின் சகோதரர் ஜெய்தேவ், உத்தவ் தாக்கரேவின் மைத்துனி ஸ்மிதா தாக்கரே மற்றும் சகோதரர் மகன் நிஹர் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஏக்நாத் ஷிண்டே

அந்த கூட்டத்தில் ஜெய்தேவ் தாக்கரே பேசுகையில், ஷிண்டேயை நான் அதிகம் விரும்புகிறேன். ஏனென்றால் துடிப்பான செயல்பாடுகளால் தான் ஷிண்டே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஷிண்டே ராஜ்ஜியத்தை கொண்டு வாருங்கள். முழுவதுமாக தேர்தல் நடத்துங்கள், முழு ஆதரவுடன் ஷிண்டே மீண்டும் ஆட்சிக்கு வரட்டும் என தெரிவித்தார்.

க்ளைட் க்ராஸ்டோ

தேசியவாத காங்கிரஸ் கடசியின் மூத்த தலைவர் க்ளைட் க்ராஸ்டோ தனது டிவிட்டர் கணக்கில், மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தல் மற்றும் ஷிண்டே ராஜ்ஜியம்  நிறுவப்பட வேண்டும் என்ற ஜெய்தேவ் தாக்கரேவின் அறிக்கை அரசியல் அர்த்தத்தை கொண்டுள்ளது. பா.ஜ.க. ஷிண்டே குழுவை ஆட்டுவித்து கொண்டிருக்கலாம், ஆனால் வெற்றிக்கு ஏக்நாத் ஷிண்டேவிடம் சில அட்டைகளை வைத்திருப்பது போல் தெரிகிறது. தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜ.க.வின் ஆட்டம் தொடங்குகிறது என பதிவு செய்துள்ளார்.