செல்லாக் காசாக மாறிவிட்டார் - தீர்ப்பு குறித்து பொன்னையன்

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து தற்போது எடப்பாடி அணியில் இருக்கும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று வந்திருக்கும் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் .
அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் , இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று பழைய படியே அதிமுக செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருப்பதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்திருக்கிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணியினர் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் போது எடப்பாடி அணியினர் படு அப்செட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி அணியில் இருக்கும் பொன்னையன் தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அவர், ‘’இந்த தீர்ப்பு சரியான தீர்ப்பா அல்லது பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய தீர்ப்பா என்பதை சட்ட ரீதியாக ஆராய வேண்டும். நடந்த பொதுக்குழுவை பொறுத்தவரைக்கும் சட்டத்திற்கு உட்பட்டுதான் கூட்டப்பட்டது. ஓபிஎஸ் தான் அதை புறக்கணித்து விட்டார். 98 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்ளவில்லை. எப்பொழுது திமுகவின் தலைவர் கருணாநிதியை கடவுளுக்கு சமமாக எனது தந்தையை வணங்கினார் என்று சட்டமன்றத்தில் ஓபிஎஸ் தெரிவித்தாரோ அப்பொழுது தொண்டர்கள் மத்தியிலே அவர் செல்லாக் காசாக மாறிவிட்டார்’’என்று கூறியிருக்கிறார்.