ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க. கனத்த இதயத்துடன் முதல்வராக்கியது.. மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை..

 
சந்திரகாந்த் பாட்டீல்

ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க. கனத்த இதயத்துடன் முதல்வராக்கியது என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவ சேனாவில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கக்கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் உத்தவ் தாக்கரே மறுத்து விட்டதால், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கான ஆதரவை திரும்ப  பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி அரசு அமைந்தது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க. கனத்த இதயத்துடன் முதல்வராக்கியது என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்ரா மாநிலம் மும்பை அருகே அம்மாநில பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேசுகையில் கூறியதாவது: சரியான செய்தியை தெரிவிக்கும் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஒரு தலைவரை நாங்கள் வழங்க வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக ஆக்குவதற்கு மத்திய தலைமையும் (கட்சி), தேவேந்திர பட்னாவிஸ் ஜியும் முடிவு  செய்தனர்.

பா.ஜ.க.

இந்த முடிவால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் முடிவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தோம். நிலையான அரசாங்கத்தை வழங்க வேண்டும் மற்றும் ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும். அந்த வேதனையை நாங்கள் ஜீரணித்து, இப்போது மகிழ்ச்சியுடன் முன்னேறி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சந்திரகாந்த் பாட்டீல் இப்படி பேசியிருப்பது ஆளும் பா.ஜ.க.-கூட்டணிக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.