சந்திரபாபு நாயுடு போட்ட சபதம்

அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிடவே மாட்டேன் என்று சந்திரபாபு நாயுடு சபதம் போட்டிருக்கிறார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசினார்.
அப்போது, ’’நான் சட்டமன்றத்திற்கு திரும்ப செல்ல வேண்டும் என்றால், அரசியலில் நான் இருக்க வேண்டும் என்றால், ஆந்திராவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த தேர்தலில் எங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், ‘’ இல்லை என்றால் அதுவே என் கடைசித் தேர்தல் ஆக இருக்கும்’’ என்று உறுதியாகச் சொன்னார்.
தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தையே முன்னேற்ற பாதையில் மீண்டும் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தவர், இதுதான் ஒவ்வொரு வீட்டிலும் விவாத பொருளாக இனி மாற வேண்டும். என் போராட்டம் குழந்தைகளின் எதிர்காலம், மாநிலத்தின் எதிர்காலம் பற்றியதுதான் என்றார்.
தன்னைப்பற்றிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு, ‘’சிலர் என் வயதைச் சொல்லி கேலி செய்கிறார்கள். நானும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வயதை உடையவர்கள்தான். ஜோபைடன் 79 வயதில் அமெரிக்க அதிபர் ஆனார்’’ என்றார்.