தமிழ்நாட்டு அரசியல் லகானை அங்கிருந்து செலுத்தலாமா? கமலாலயத்தில் பேச வேண்டியதை அங்கே பேசலாமா?- ஆளுநருக்கு டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி

 
tர்

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்கனவே ஒரு மாநிலத் தலைவர் இருக்கிறார்.  ஆனால் ஆளுநர் இன்னொரு  பாஜக தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் டி. ஆர். பாலு எம்பி.

 காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்தது .  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டினார் ஆளுநர் ஆர்என் ரவி.   அப்போது பேசியவர்,  தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.  

 எல்லாவற்றுக்கும் நாங்கள்  திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.   இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.   முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் .   ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன .  பாரதத்தின்  பகுதி  தமிழகம்.    பாரதத்தின் அடையாளம் தமிழகம் .  உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசியிருந்தார்.

ர்ன்

 இதற்கு திமுக எம் பி டி. ஆர். பாலு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.    தமிழ்நாட்டில் பிரிவினையையும் மோதல்களையும் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி.   

 அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம் ,ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை பற்றி பேசும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.   வகுப்புவாத பிரிவினை அரசியலைப் பேசி மீண்டும் வருணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது.   

 தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய் பேச வேண்டியது எல்லாம் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கண்டனத்திற்குரியது.   தமிழ்நாடு பாஜகவின் தலைவராகும் ஆசை இருந்தால் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு இது போன்ற அபத்தங்களை பேசட்டும்.   ஆனால் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்த பார்ப்பது அரசியல் சட்டத்தை கேலிக்கூத்து ஆக்குகிறது என்கிறார்.

 தமிழ்நாடு வளர்ந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்கிற ஐயம் எழுகிறது.   அதனால் தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்கு கோபம் வருகிறது.  திராவிடம் என்கிற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது?  அந்த சொல் எதனால் இவருக்கு சுடுகிறது.  திராவிட கட்சிகள் பிரிவினையை வளர்த்தது என்று சொல்கிறார். 

 தமிழ்நாடு- தமிழன்- தமிழ் என்று பேசுவது தான் பிரிவினைவாதம் என்றால் அவரின் உள்நோக்கம் தெளிவாக தெரிந்து விட்டது . அவருக்கு இந்த மூன்றும் பிடிக்கவில்லை.  தமிழ்நாடு -தமிழன் -தமிழ் என்பது ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன.  அதனால் இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் இருப்பதால் இன்னொரு  தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவது அவருக்கு சிறந்தது என்கிறார் டி. ஆர். பாலு.