ஓபிஎஸ்சை நீக்கிய சிவி சண்முகம் -பரபர பின்னணி
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது எம்ஜிஆர்’ம், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ‘ஜெயா டிவி’யும் இருந்தது. சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு நீக்கி விட்டதால், அவர்கள் வசம் இருந்த நமது எம்.ஜி.ஆர் நாளிதழும், ஜெயா டிவியும் அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ஆகிவிட்டன.
அதன்பின்னர் அதிமுகவிற்கு அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி வேண்டும் என்றுதான் ‘நமது அம்மா’நாளிதழும், ‘news-j’டிவியும் வந்தன. இந்த இரண்டிலும் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. நமது அம்மா நாளிதழிலின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், சிவி.சண்முகமும் இருக்கிறார்கள் என்கிறார்கள். நியூஸ் ஜெ டிவியின் பின்னணியில் சண்முகத்தின் சகோதரர் உள்ளார் என்கிறார்கள்.
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் அதற்கு ஒத்துவராத ஓபிஎஸ்சை கட்சியை விட்டு முதலில் ஓரங்கட்டி அடுத்ததாக கட்சியை விட்டே வெளியேற்ற வேண்டும் தீவிரமாக இருப்பது சண்முகம்தான். அவரின் தூண்டுதலில்தான் எடப்பாடியே ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அழுத்தமாக கால் வைத்திருக்கிறார் என்கிறார்கள். ஓபிஎஸ் தலைமைக்கு கட்சி போய்விட்டால் சசிகலா உள்ளே வந்துவிடுவார் என்றுதான் சண்முகம், எப்படியாவது எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்கிவிட பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார் என்கிறது அதிமுக வட்டாரம்.
நடந்து முடிந்த பொதுக்குழு செல்லாது. அது கோர்ட் உத்தரவை மதிக்காமல் நடந்த பொதுக்குழு. ஆகவே, அங்கு முறையற்று அறிவித்த அடுத்த பொதுக்குழுவும் செல்லாது அது நடக்காது . ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து ஒப்புதலுடன் தான் அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு சொல்லிவர, ஒருங்கிணைப்பாளர் பதவி எல்லாம் பொதுக்குழுவில் காலாவதியாகிவிட்டது. இனி அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகிறார் என்று உறுதியாக சொல்கிறார் சண்முகம்.
சண்முகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தான் முதலில் ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டது. அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் அனைத்திலும் ஓபிஎஸ் படங்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து இருதரப்பிலும் மாறிமாறி பதிலடி கொடுத்து வருகின்றனர். ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த இபிஎஸ் போட்டோவை செருப்பால் அடிக்கும் அளவுக்கு மோதல் வலுத்திருக்கிறது.
இந்த நிலையில்தான் நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கியிருக்கிறார் சண்முகம். நமது அம்மா நாளிதழ் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் வேலுமணியின் கையில் இருந்தாலும், சண்முகமும் அதில் உள்ளதால் அவர்கள் இஷ்டப்படி ஓபிஎஸ்சை நீக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள். அடுத்ததாக, ஓபிஎஸ்சின் கட்சி பதவியை பறித்து அவரை கட்சியை விட்டே நீக்கவும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் என்கிறது அதிமுக வட்டாரம்.