குமரி அனந்தனுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 
ku

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா நகரில் வீடு வழங்கப்பட்டிருக்கிறது.   தனக்கு தமிழ்நாடு அரசின் கீழ் வீடு வழங்க வேண்டும் என்று குமரி அனந்தன் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் வீடு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.   இதற்கான ஆணையை தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் நேரில் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

 இது குறித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.   அந்த செய்தி குறிப்பில்,    இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் அகத்தீஸ்வரத்தில் பிறந்தவர்.  சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருஷ்ணன் இவரது தந்தை.   பெருந்தலைவர் காமராஜரின் சீடர்.   காங்கிரஸ் பேரியக்கத்தின் மேனாள் மாநில தலைவர்.   மக்கள் நலனுக்காக 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ka

 இலக்கிய செல்வராகவும், மேடை மன்னராகவும் , எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்குபவர் குமரி அனந்தன்.  நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,  ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவராகவும் பணியாற்றியவர் குமரி ஆனந்தன். 

தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் எல்லாம் பெருமை சேர்த்து வரும் குமரி அனந்தன் தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.  அவரது கோரிக்கையினை ஏற்று சென்னை அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  இதற்கான ஆணையினை  தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் நேரில் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.