கர்நாடக மக்கள் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள்.. பைரதி சுரேஷ் பேச்சால் காங்கிரஸில் புகைச்சல்

 
தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

கர்நாடக மக்கள் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள் என்று அவரது ஆதரவாளர் பைரதி சுரேஷ் பேசியிருப்பது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே முதல்வர் ஆசை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

பைரதி சுரேஷ்

இந்நிலையில், சித்தராமையா  ஆதரவாளரும், பெங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பைரதி சுரேஷ் தனது தொகுதியில் நடத்திய கூட்டத்தில் வெளிப்படையாக சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கூறினார். பைரதி சுரேஷ் அந்த கூட்டத்தில் கூறியதாவது: இந்த மாநில மக்கள் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள். உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடனும் காங்கிரஸ் விரைவில் ஆட்சிக்கு வரவும், சித்தராமையா முதல்வராகவும் நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார். இவரது பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

டி.கே.சிவகுமார்

அதேசமயம், காங்கிரஸ் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் முதல்வர் போட்டியிட விரும்புவதாகவும் டி.கே. சிவகுமார் மறைமுகமாக தெரிவித்துள்ளார். வொக்கலிகாக்கள் சமூகத்தின் இடஒதுக்கீடு கோரிக்கையை விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் டி.கே.சிவகுமார் பேசுகையில், சமூகத்திற்கு இந்த முறை ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது, அதை இழக்கக் கூடாது. சமூகம் எனக்கு ஒரு பேனா மற்றும் காகிதத்தை கொடுத்தால் நான் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வேன் என தெரிவித்தார்.