அதற்குள் சண்டையெல்லாம் முடிந்து ரொம்ப சூடாக இருந்தார்கள் -அண்ணாமலை

 
ann

காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்ததை எடுத்து அவரது பூத உடல் நேற்று மதுரை வந்தது.   அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பாஜகவினர் திரண்டு நின்றனர்.   அஞ்சலி செலுத்த வந்த  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை பார்த்து,   ‘’’இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது?  யார் இவன்களை உள்ளே அனுமதித்தது?’’ என்று சொல்லி திட்டினார் என பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். 

ap

 இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி சென்ற நிதியமைச்சர் பி டி ஆர் காரை வழிமறித்து உள்ளனர் . அப்போது காரை நிறுத்தாமல் சென்றதால் அவர் கார் மீது செருப்பை வீசியுள்ளனர்.  இதற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்,   பாஜகவினரை பார்த்து  என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்.   முதலில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது.  எங்கள் கட்சியினரை பார்த்து கையை ஓங்கி இருந்தால் பிரச்சனை வேறு மாதிரியாக இருக்கும் என்று எச்சரித்தவர்,   இனி பி டி ஆர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் என்று எச்சரித்து இருந்தார் . ஆனால் நேற்று இரவு பி டி ஆர் ஐ சந்தித்து மன்னிப்பு கேட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

sa

 அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில்  ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய போது,   ’’ பாஜக எப்போதும் அமைதியை விரும்பக் கூடிய கட்சி . கலவரத்தை விரும்பக் கூடிய கட்சி கிடையாது.   அதே நேரம் நேற்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொதுமக்களிடம் பேசிய வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியாது.  அந்த நேரத்தில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய சம்பவமும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

aa

 ’’தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யட்டும்.  கட்சித் தொண்டர்கள் அனைத்திற்கும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார்.   அவர் மேலும்,   ’’நேற்று அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது.  ஒருவேளை நான் அரை மணி நேரம் முன்னாடி  சென்று இருந்தால் இதை தடுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் சண்டை எல்லாம் முடிந்து ரொம்ப சூடாக இருந்தார்கள்’’ என்று தெரிவித்திருக்கும் அவர் அவரிடம்,    டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு,   ’’மதுரை மாவட்ட பாஜக தலைவர் தனது தாய்க்கழகத்திற்கு செல்வதாக கூறியிருக்கிறார்.  அது அவரது உரிமை.  அவர் கட்சியை விட்டுச் சென்றால் மற்றொருவர் பதவிக்கு அமர்த்தப்படுவார்கள்.   அவ்வளவு தான்’’ என்றார்.

 காவல்துறை கைது செய்துள்ள நபர்களில் சில அப்பாவிகள் இருக்கிறார்கள் அவர்கள் அந்த இடத்தில் இல்லாதவர்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை.