ராஜ் தாக்கரேவை அயோத்திக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்.. பா.ஜ.க. எம்.பி.

 
பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்

வட இந்தியர்களை அவமானப்படுத்தும் ராஜ்தாக்கரேவை அயோத்தி எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே புனேவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராஜ்தாக்கரே கூறியதாவது: ஜூன் 5ம் தேதி நான் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தொண்டர்களுடன் அயோத்தி தரிசனத்திற்காக செல்வேன். மற்றவர்களையும் அயோத்திக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நீண்ட நாட்களாக வெளியூர் பயணம் செய்யவில்லை, மற்றப்படி அயோத்தி பயணத்துக்க எந்தவித நோக்கமும் இல்லை.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா

ராமர் கோயிலுக்காக எத்தனையோ கர சேவகர்கள் உயிர் இழந்தார்கள். மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு காரணமாக அங்கு ராமர் கோயில் அமைக்கப்படுகிறது. எனவே கட்டுமான பணியின் ஆரம்ப கட்டத்தில் நான் அங்கு செல்ல விரும்புகிறேன். பின்னர் கோயில் தயாரானதும்,அனைவரும் மீண்டும் அதற்கு செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், ராஜ் தாக்கரேவை அயோத்திக்குள் நுழைய விடமாட்டேன் என பா.ஜ.க. எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…

பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் டிவிட்டரில், வட இந்தியர்களை அவமானப்படுத்தும் ராஜ்தாக்கரேவை அயோத்தி எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன். அயோத்தி வருவதற்கு முன் ராஜ் தாக்கரே அனைத்து வட இந்தியர்களிடமும் கூப்பிய கைகளுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். ராஜ் தாக்கரேவுக்கு பா.ஜ.க. எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.