முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் போகுது -குஷ்பு பரபரப்பு
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. பணம் வரவில்லை என்று மறுப்பு சொல்ல முடியாது. இதை சொன்னதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு.
பால்விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து சென்னை அடையாறு பகுதியில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பங்கேற்று பேசினார்.
அப்போது, மக்களைப் பற்றி தமிழக முதல்வருக்கு கவலையே இல்லை. திமுகவினருக்கு பணம் வந்தாலே போதும் என்று இருக்கிறார்கள். தமிழக முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது . அப்படி பணம் வரவில்லை என்று அவர் மறுப்பு சொல்ல முடியாது. இதை சொன்னதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்று அதிரடி காட்டினார் குஷ்பு.
அவர் மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. திமுக நிர்வாகி மேடையிலேயே பெண்களைப் பற்றி அவதூறாக பேசுகிறார். அதனை அமைச்சர் மனோ தங்கராஜ் ரசித்துக்கொண்டிருந்தார். அமைச்சர் பொன்முடியும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிப்பதை ஓசி பயணம் என்று அவதூறாக பேசுகிறார். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கட்சி ரீதியாக கூட எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் மகள் என்ற வகையில் தமிழக முதல்வரை பற்றி கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசப்பட்டார்.
நவம்பர் மாதத்தில் , மழை வரும் என்று தெரிந்து மழை நீர் வடிகால் பணியை காலதாமதமாக தொடங்கியது ஏன்? திட்டமிட்டே காலம் தாழ்த்தி மழை வந்தால் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மழை வந்தால் பாதியில் திட்டத்தை நிறுத்திவிட்டு சம்பாதிக்கலாம் என்று தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.