ஓசியில் பிறந்தவர்- அமைச்சர் பொன்முடி மீது கஸ்தூரி தாக்கு
அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைத்து ஆண்களுமே பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான் என்று கடுமையாக சாடி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதை ஓசி பயணம் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி ஏளனம் செய்து உள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற நடிகை கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் பொன்முடியின் ஓசி பயணம் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, பெண்களுக்கு பேருந்து இலவச பயணம் பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்துகின்ற நல்ல திட்டம். பொதுவாக அரசு எந்த திட்டத்தையுமே அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகிறார்கள்.
மக்களுக்கு ஒரு திட்டத்தை செய்து விட்டு அதை சுட்டிக் காட்டுவது மிகப்பெரிய தவறு . அதிலும், ஓசி பஸ் என்கிற வார்த்தையை அமைச்சர் பொன்முடி பயன்படுத்தியது அதை விட பெரிய தவறு.
அமைச்சர் பொன்முடி பேசியதை நியாயப்படுத்த முடியாது. ஓசி பஸ் என்று பெண்களை சொல்லும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைத்து ஆண்களும் பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான் என்று கடுமையாக சாடிய கஸ்தூரி, பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான் அமைச்சர்கள் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.