பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு மெகா கூட்டணியில் இணைந்தது ஏன்?.. நிதிஷ் குமார் விளக்கம்

 
நிதிஷ் குமார்

பீகாரில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு மெகா கூட்டணியில் இணைந்தது ஏன் என்பதற்கு அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா  தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தபோது, நம் கட்சியையே தோற்கடிக்க அவர்கள் சதி செய்தனர். அருணாசல பிரதேசத்தில் நம் எம்.எல்.ஏ.க்களை அவர்கள் (பா.ஜ.க.) விரட்டியடித்தார்கள். 

பா.ஜ.க.

நம்முடன் கூட்டணி வைத்துக் கொண்டு இதைவிட இழிவான செயல்களை அவர்கள் செய்திருக்க முடியுமா? அவர்களின் பண்பை பிரதிபலித்த நடவடிக்கை என்னை உறவை முறித்துக் கொள்ள வழிவகுத்தது. கட்சியின் தலைவர்கள் விஜேந்திர யாதவ் மற்றும் லாலன் சிங் ஆகியோரின் ஆலோசனை பேரில் பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்த ஒரு (குர்ஹானி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்) வெற்றியால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. 

லாலன் சிங்

முந்தைய இரண்டு தோல்விகள் மற்றும் பிற மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விகளை அவர்கள் ஏன் நினைவில் கொள்ளவில்லை?. பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகளில் பெரும்பாலோர் கைகோர்த்தாலும், பெரும் பெரும்பான்மை உறுதி செய்யப்படும். இந்த யோசனை மூன்றாம் முன்னணி என்று அழைக்கப்படுபவை அல்ல, இது முக்கிய முன்னணியாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் நிதிஷ் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார்.