முதல்வர் ரேஞ்சுக்கு உதயநிதிக்கு வரவேற்பு! வெயிலில் வாடிய குழந்தைகள்!
முதல்வர் ரேஞ்சுக்கு கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் அவரின் வருகைக்காக குழந்தைகள் பல மணி நேரம் வெயிலில் வாடி கிடந்திருக்கிறார்கள்.
கோவை நேரு ஸ்டேடியத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிந்தடிக் ட்ராக் மற்றும் 65.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் மராமத்து பணிகளுக்கான துவக்க விழா நடந்தது.
நேற்று இந்த விழாவிற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற சிறுவர்களை காலை 8 மணிக்கு ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்து அமர வைத்துள்ளார்கள். அமைச்சர் உதயநிதி காலையில் 10 .15 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே காலை 8 மணிக்கு ஸ்டேடியத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். ஆனால் அமைச்சர் உதயநிதியோ 11:53 மணிக்குத்தான் ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார்.
குழந்தைகள், மாற்றுத்திறனாளி வீரர்கள், கல்லூரி மாணவர்கள் அமருமிடத்தில் பந்தல் போடாமல் இருந்ததால் வெட்ட வெளியில் தான் இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. அமைச்சர் வரும் வரைக்கும் குழந்தைகள் வெயிலில் வாடி இருக்கிறார்கள். குழந்தைகளின் தாய்மார்கள் டவல், பெட்ஷீட் ,துப்பட்டா கொண்டு குழந்தைகளை வெயிலில் இருந்து காத்திருக்கிறார்கள்.
அமைச்சராக பதவி ஏற்று முதன்முதலாக கோவை சென்ற உதயநிதிக்கு ஹூசூர் சாலை , ரயில்வே ஸ்டேஷன் சாலை, நஞ்சப்பா சாலை , அவிநாசி சாலை ஆகிய முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். முதல்வர் ரேஞ்சுக்கு உதயநிதிக்கு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது கோவை மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
11:53 மணிக்கு வரும் அமைச்சருக்கு காலை எட்டு மணிக்கே வரவைத்து வெயிலில் வாட வைத்தது ஏன் என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள். இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், காலை 10 .15 மணிக்கு அமைச்சர் வந்து பணிகளை துவக்கி வைத்து 10. 25 மணிக்கு திரும்புகிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனால் தான் டென்ட் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. பத்து நிமிடங்கள் மட்டுமே தான் நிகழ்ச்சி என்பதால் செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு காரணங்களால் அமைச்சர் வர தாமதமாகிவிட்டது என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.