ஹரியானாவில் உங்களுக்காக ஒரு அரசாங்கம் அமைக்கப்படும், நாங்கள் அதை அமைப்போம்... காங்கிரஸ் நம்பிக்கை
ஹரியானாவில் உங்களுக்காக ஒரு அரசாங்கம் அமைக்கப்படும், நாங்கள் அதை அமைப்போம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பூபிந்தர் சிங் ஹூடா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளதாக யாராவது கூறுவார்கள். அது ஆம் ஆத்மி கட்சி, இது உங்கள் அரசு அல்ல. உங்களுக்காக ஒரு அரசாங்கம் அமைக்கப்படும், நாங்கள் அதை அமைப்போம்.
இன்று நான் ஜி.டி. ரோடு பெல்ட்டில் இருந்தே பிரச்சாரத்தை தொடங்கும்போது, (பா.ஜ.க.-ஜே.ஜே.பி.) அரசாங்கத்தை தூக்கி எறிவதற்கான உறுதிமொழியை எடுக்க வந்துள்ளேன். நீங்கள் என்னுடன் ஒற்றுமையாக நின்றால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் அரசு (முந்தைய காங்கிரஸ் அரசு) 3.82 லட்சம் வீட்டு மனைகளை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தது.
இப்போது நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டத்தில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. பட்ஜெட் உரையில் கூட சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் (எஸ்.ஒய்.எல்.) கட்டுமானம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை அல்லது அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். நம் நாட்டில் தற்போது சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.