கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு முதல்வர் பதவி ஆசை காட்டிய அகிலேஷ்.. உங்க கட்சி எம்.எல்.ஏ.க்களை பற்றி கவலைப்படுங்க- பா.ஜ.க.

 
பூபேந்திர சிங் சவுத்ரி

பா.ஜ.க.வின் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு முதல்வர் பதவி ஆசை காட்டிய அகிலேஷ் யாதவுக்கு, உங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் அதனால் உங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் பற்றி கவலைப்படுங்க என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசுகையில், பீகாரில் நிலவும் அரசியல் முன்னேற்றங்களை குறிப்பிட்டு கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு அறிவுரை கூறி, 100 எம்.எல்.ஏ.க்களுடன் சமாஜ்வாடி கட்சியில் சேருமாறு மௌரியாவுக்கு அறிவுறுத்தினார். அப்படி  சேர்ந்தால் கேசவ் பிரசாத் மவுரியா முதல்வராக பதவியேற்கப்படுவார் என்று தெரிவித்தார். 

கேசவ் பிரசாத் மவுரியா

கேசவ் பிரசாத் மவுரியா பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், 100 எம்.எல்.ஏ.க்களுடன் சமாஜ்வாடி கட்சி இணைந்தால் முதல்வர் பதவி தரப்படும் என்று கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு அகிலேஷ் யாதவ் வெளிப்படையாக அழைப்பு விடுத்து இருப்பது உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ் யாதவ்

கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு அழைப்பு விடுத்த அகிலேஷ் யாதவுக்கு உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பூபேந்திர சிங் சவுத்ரி கூறுகையில்,  கேசவ் ஜி அமைப்பின் நிரூபணமான தொண்டன் மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அவர் எங்களுடன் இருப்பார், அவர் சுயநலவாதி அல்ல. அவர் அகிலேஷ் யாதவை கட்டுப்படுத்துவார், அகிலேஷ் யாதவால் அவரை கட்டுப்படுத்த முடியாது. அகிலேஷ் யாதவ் தனது கூட்டணி அவரது குடும்பம், கட்சி மற்றும் எம்.எல்.ஏ.க்கள்  குறித்தும் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவரது எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என தெரிவித்தார்.