கெஜ்ரிவாலை சந்திக்க பஞ்சாப் அதிகாரிகளை நான் தான் அனுப்பினேன்.. இஸ்ரேலுக்கும் அவர்களை அனுப்புவேன்.. பகவந்த் மான்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

கெஜ்ரிவாலை சந்திக்க டெல்லிக்கு பஞ்சாப் அதிகாரிகளை நான் தான் அனுப்பினேன், நான் விரும்பினால் இஸ்ரேலுக்கும் அவர்களை அனுப்புவேன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில தலைமை செயலாளர், மின்துறை செயலாளர் மற்றும் பஞ்சாப் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லாத நிலையில், டெல்லி முதல்வர் பஞ்சாப் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாபின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இது தொடர்பாக கூறுகையில், மோசமானது அஞ்சப்பட்டது, மோசமானது நடந்தது. அது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பே அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபை கைப்பற்றி விட்டார். பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்ட முடிவாக இருந்தது, இப்போது டெல்லியில் பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி கெஜ்ரிவால் அதை நிரூபித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

பகவந்த் மான்

ஆனால் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானோ, அரவிந்த் கெஜ்ரிவாலும் பஞ்சாப் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதை ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பகவந்த் மான் கூறுகையில், கெஜ்ரிவாலை சந்திக்க பஞ்சாப் உயர் அதிகாரிகளை அனுப்பியது எனது முடிவு. தேவைப்பட்டால் டெல்லி அல்லது குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அல்லது எங்கெல்லாம் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் நல்லது என்று உணர்கிறேனோ அங்கெல்லாம் அதிகாரிகளை அனுப்புவேன்.  நான் விரும்பினால், அவர்களை இஸ்ரேலுக்கும் அனுப்புவேன் என்று தெரிவித்தார்.