பிரதமர்கள், தலைவர்கள் யாரையும் மறக்கும் பேச்சுக்கே இடமில்லை.. காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த பொம்மை

 
பவசராஜ் பொம்மை

நாட்டின் அனைத்து பிரதமர்களும், தலைவர்களும் தங்களின் வழியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளனர். யாரையும் மறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடாக பா.ஜ.க. அரசு கடந்த சில தினங்களுக்கு முன் வீடுகளில் தேசியக் கொடி  பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்த பத்திரிகையில் முழு பக்க அளவில் விளம்பரம் செய்து இருந்தது. அந்த விளம்பரத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இடம் பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது சுதந்திர தின உரையில் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக அரசின் விளம்பரம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மானெக்ஷா பரேட் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உரையாற்றுகையில் கூறியதாவது: முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, பின்னர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பல பிரதமர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேசத்திற்காக தங்கள் சொந்த வழியில் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரின் பங்களிப்பையும் முன்னிலைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். 

மோடி

நாட்டிற்கு பல்வேறு பிரதமர்களின் பங்களிப்பை அறிய எந்த பிரதமரும் நினைத்திருந்தால் அது நரேந்திர மோடிதான். இங்கு யாரையும் மறப்பது இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வழியில் பங்களித்துள்ளனர். பிரதமர்கள் மட்டும் பங்களிக்கவில்லை, பங்களித்த பல பிரபலங்களும்  உள்ளனர். அம்பேத்கரை மறைக்க பல முயற்சிகள் நடந்தன. ஜெய் ஜவான், ஜெய் கிசான்  அல்லது அப்துல் கபர் கான் என்று அழைப்பு விடுத்த லால் பகதூர் சாஸ்திரியை நாம் மறக்க வேண்டுமா? சுதந்திர போராட்டத்திற்காக பலர் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.