உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள்.. ராஜஸ்தானில் பைலட் ஆதரவாளர்கள் வைத்த பேனரால் பரபரப்பு

 
ராஜஸ்தானில் மத்திய பிரதேசம் போன்ற நிலைமை இல்லை…… சச்சின் பைலட் நம்பிக்கை

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் பிரச்சினைக்கு மத்தியில், உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி.யும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதல்வரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் முதல்வர் பதவியை  தொடர்வதில் எந்த தடையும் இல்லை என்று அசோக் கெலாட் அண்மையில் தெரிவித்து இருந்தார். ஆனால் ராகுல் காந்தி கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் உறுதியாக தெரிவித்தார். இதனையடுத்து முதல்வர் பதவியை துறக்க முன்வந்தார். இதனையடுத்து, ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்படலாம் என பேச்சு அடிப்பட்டது. ஆனால் தனது எதிரியான சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுப்பதில் அசோக் கெலாட்டுக்கு விருப்பம் இல்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்த பேனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 80 பேர், முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுத்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைமை அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரை அனுப்பியது. ஆனால் அவர்கள் இருவரையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க மறுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில், ஜோத்பூரில் பல இடங்களில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் சச்சின் பைலட் இடம் பெற்றுள்ளதுடன், உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் சச்சின் பைலட்தான் என்பதை இந்த பேனர்கள் சொல்லாமல் சொல்கின்றன என கூறப்படுகிறது.