உத்தர பிரதேசமும் பீகாரும் இணைந்தால் மோடி அரசு அகற்றப்படும்.. சமாஜ்வாடி கட்சி பேனரால் பரபரப்பு

 
சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்

உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசமும், பீகாரும் இணைந்தால் மோடி அரசு அகற்றப்படும் என்ற பேனர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.இதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். அண்மையில், சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமாஜ்வாடி

அந்த பேனரில், உத்தர பிரதேசமும் பீகாரும் இணைந்தால் மோடி அரசு அகற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிதிஷ் குமாரும், அகிலேஷ் யாதவும் மக்களை பார்த்து கை அசைப்பது போன்ற படங்கள் இடம் பெற்றுன. அந்த  பேனர் வைத்த சமாஜ்வாடி கட்சியின் ஐ.பி.சிங் கூறுகையில், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் நாட்டின் அரசியலின் போக்கை மாற்றும் நிகழ்வுகளை தொடங்கிய வரலாறு உண்டு. இந்த மாநிலங்கள் (மாற்றத்திற்கு செல்ல) முடிவு செய்தால் (மற்றவர்களுக்கு) எதுவும் மிச்சமாகாது. அரசியல் வரைபடத்தை பார்த்தால், பா.ஜ.க. எங்கும் இருக்காது என தெரிவித்தார்.

பா.ஜ.க.

உத்தர பிரதேசமும், பீகாரும் இணைந்து 120 (முறையே 80 மற்றும் 40 மக்களவை தொகுதிகள்) எம்.பி.க்களை நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்புகின்றன. பொதுவாக இந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் கட்சி அல்லது அரசியல் அமைப்பு மத்தியயில் ஆட்சி அமைக்க நல்ல நிலையில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. 62 இடங்களிலும், பீகாரில் அப்போதைய பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களில் (பா.ஜ.க. மட்டும் 17 இடங்கள்) வெற்றி பெற்றது.