கே.சந்திரசேகர் ராவும், கவிதாவும் தெலங்கானா உணர்வை தூண்டி மக்களின் அனுதாபத்தை பெற திட்டம்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
கவிதா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும், அவரது மகள் கவிதாவும் தெலங்கானா உணர்வை தூண்டி மக்களின் அனுதாபத்தை பெற திட்டமிட்டுள்ளனர் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா முதல்வரின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கல்வகுந்த்லா கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யை  எதிர்கொள்வதை தவிர்த்து வருவாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார். தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் தற்போது பிரஜா சங்க்ராம யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின் எட்டாவது நாளான நேற்று நிர்மல் மாவட்டத்தின் கனகபூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பண்டி சஞ்சய் குமார் உரையாற்றுகையில் கூறியதாவது: ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மதுபான ஊழலில் கவிதா நிச்சயமாக ஈடுபட்டுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினால் கைது செய்யப்படலாம் என்று கவிதா அஞ்சுகிறார். அதனால்தான் கவிதாவும் அவளுடைய தந்தை கே.சந்திரசேகர் ராவும் அழுது, ஒருவரையொருவர் ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார்கள். சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவதை தவிர்க்க தந்தை-மகள் இருவரும் புதிய நாடகம் நடத்துகிறார்கள். தெலங்கானா உணர்வை தூண்டி மக்களின் அனுதாபத்தை பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

கே.சந்திரசேகர் ராவ்

கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கவிதாவின் இது போன்ற வித்தைகள் குறித்து மாநில மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கே.சந்திரசேகர் ராவ் மகள் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டால் நீங்கள் ஏன் போராட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட வேண்டும்?. பி.ஆர்.எஸ். அரசாங்கத்தை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்ததாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார். ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகளில் எந்தக் காரணமும் இல்லை. தெலங்கானா சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். பி.ஆர்.எஸ். அரசாங்கத்தை கவிழ்க்க இன்னும் 57 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இது சாத்தியமா?. உண்மையில் கே.சந்திரசேகர் ராவ் மக்களின் அபிலாஷைகளை தகர்த்து விட்டார். பிற கட்சிகளை சேர்ந்த 37 எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடி ஜனநாயகத்தை வீழ்த்தியவர் அவர். நாங்கள் அதை செய்ய மாட்டோம். அடுத்த தேர்தலில் உங்களை (கே.சந்திரசேகர் ராவ்) ஆட்சியில் இருந்து வீழ்த்த மக்கள் தயாராகி வருகின்றனர். 

வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை மீண்டும் திறக்கப்பட்டு விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும். கே.சந்திரசேகர் ராவின் குடும்பத்துக்கு இந்த வழக்குகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் மீது மீண்டும் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி பொதுவெளியில் தண்டிக்க வேண்டும். தேர்தலுக்கு முன் அளித்த பல வாக்குறுதிகளை கே.சந்திரசேகர் ராவ் நிறைவேற்ற தவறிவிட்டார். மாநிலத்தில் சூறையாடுவதில் அவர் ஈடுபட்டார். தெலங்கானாவில் இப்போது என்ன வளர்ச்சி மற்ற நலன்கள் காணப்பட்டாலும்  அது மத்தியில் நரேந்திர மோடி அரசு வெளியிட்ட நிதியால்தான். அடுத்த தேர்தலுக்கு பிறகு அமைக்கப்படும்  பா.ஜ.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.