மோடியை வரவேற்க வராத தெலங்கானா முதல்வர்.. படித்த 80 ஆயிரம் புத்தகங்களில் இதைத்தான் கற்ற கொண்டீர்களா?.. பா.ஜ.க.

 
பிரதமர் மோடியை வரவேற்ற கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள்

பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு வராத தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை, நீங்கள் படித்த 80 ஆயிரம் புத்தகங்களில் இதைத்தான் கற்றுக் கொண்டீர்களா? என தெலங்கானா பா.ஜ.க. தலைவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஸ்ரீ ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள்  நிறைவுற்றதைக் கொண்டாடும் வகையில் அவருக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையில்  உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை 1,500 டன் எடை மற்றும் 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

சமத்துவ சிலை

ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலையை திறந்து வைப்பதற்கும், ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி.-ன் 50வது ஆண்டு விழாவை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் விமானத்தில் ஹைதராபாத் விமானம் நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். ஆனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமரை வரவேற்க வராத முதல்வர் சந்திரசேகர் ராவை பா.ஜக. விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜ.க.

இது தொடர்பாக தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில், நொண்டி சாக்குகளை கூறி பிரதமர் மோடியின் வருகையை மறுத்து விளையாடுவது வெட்கக்கேடானது. பிரதமர் மீது வீசப்பட்ட அவரது அசிங்கமான துஷ்பிரயோகங்களை ஒட்டு மொத்த நாடும் வெறுக்கும் நிலையில், பிரதமருக்கு தனது முகத்தை காட்ட முதல்வர் விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. மிஸ்டர் கே.சி.ஆர். இதுதான் உங்கள் கலாச்சாரமா? நீங்கள் 80 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறுகிறீர்கள். அவற்றிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது இதுதானா? பிரதமரை அவமதிப்பது ஒட்டு மொத்த தேசத்தையும் அவமதிப்பதற்கு சமம் என்று கூறிய பா.ஜ.க. தலைவர், இவ்வளவு அவதூறுகளை வீசிய பின்னர் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முதல்வர் பயப்படுகிறார் என்று தெரிவித்தார்.