ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி வாங்க மறுத்த பின்னணி

 
ep

ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி வாங்க மறுத்து விட்டதால் சுவற்றில் அடித்த பந்தாக ஓபிஎஸ் இடமே திரும்பி வந்து இருக்கிறது அந்த கடிதம்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு திடீரென்று ஒரு சிக்கல் வந்திருக்கிறது.  இரட்டை இலை சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவது என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் -எடப்பாடி இரண்டு பேரும் கையெழுத்திட்டு அனுமதி தர வேண்டும்.  ஜூலை 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட இருந்த நிலையில்,   ஓபிஎஸ் -எடப்பாடி இருவருக்குமிடையே ஒற்றைத்தலைமை மோதல் உச்சத்தில் இருக்கிறது.

 ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்திலும்,  எடப்பாடி உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் முறையிட்டு இருப்பதால் அங்கேயும் பதில் அளிக்க எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது.  

ooo

 இந்த நிலையிலும் வேட்பாளர்களின் நிலையை கருதி  எடப்பாடிக்கு கடிதம் எழுதி இருந்தார் ஓபிஎஸ்.   உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதாக  படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருந்தார் ஓபிஎஸ் .  கட்சியின் மேலாளர் மகாலிங்கம் மூலமாக இந்த கடிதம் எடப்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.   ஆனால் இந்த கடிதத்தை எடப்பாடி வாங்க வில்லையாம்.

 உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்குவதற்கு நான் தயார் நீங்கள் தயாராக இருந்தால் அதில் கையெழுத்திட்டு உடனே அனுப்புங்கள் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.   இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட எனக்கு சம்மதம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.  ஆனால் ஓபிஎஸ் அனுப்பிய அந்த கடிதத்தை எடப்பாடி வாங்காமல் நிராகரித்திருக்கிறார்.  அதனால் இந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

 ஒருங்கிணைப்பாளர் பதவியே காலியாகிவிட்டது பொருளாளர் பதவி மட்டுமே  தற்போது இருக்கிறது.   அதையும் பறித்து கட்சியை விட்டு வெளியேற்றி விடுவோம் என்று எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்க்கு சவால் விட்டு வரும் நிலையில் இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டால் ஓபிஎஸ்சை ஒருங்கிணைப்பாளர் என்று ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால் எடப்பாடி கடிதத்தை வாங்காமல் நிராகரித்து விட்டதாக தகவல்.