கர்நாடக முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை.. பா.ஜ.க.வை குற்றம் சாட்டிய காங்கிரஸ்

 
 பி.கே. ஹரிபிரசாத்

கர்நாடக முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அண்மைக் காலமாக எதிர்க்கட்சியான காங்கிரஸ், முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவார் என்று கூறி வருகிறது. இதற்கு பா.ஜ.க.வும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வில் முதல்வர் பதவி விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசவராஜ் பொம்மை

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.கே. ஹரிபிரசாத் கூறுகையில், முதல்வர் பதவி என்பது மிகவும் விலை உயர்ந்த விவகாரம். முதல்வர் பதவிக்கு ஏராளமானோர்  ஆர்வமாக உள்ளனர் மற்றும் இதில் பெரும் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி விலை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார் என தெரிவித்தார். 

பிரபு சவுகான்

கர்நாடக அமைச்சரவை அமைச்சராக இருக்கும் பிரபு சவுகான் கூறுகையில், இந்த வதந்திகள்  தொடரும், பசவராஜ் பொம்மையையும் பதவியில் தொடருவார். காங்கிரஸூக்கு இப்போது வேலை இல்லை. அவை வெறும் என்ஜினீயரிங் பொய்கள். காங்கிரஸூக்கு வேறு எதுவும் பேச முடியாது. அவர்கள் விஷயங்களை உருவாக்க வேண்டும் அல்லது அவர்களால் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்க முடியாது. இந்த அறிக்கையை நான் கண்டிக்கிறேன். இது வெறும் பொய். முதல்வர் பதவி விற்பனைக்கு இல்லை என தெரிவித்தார்.