அகிலேஷ் யாதவ் கட்சியின் கோட்டையை தகர்த்த யோகி.. ராம்பூர், அசம்கர் மக்களவை தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க.

 
பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில்  ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

டெல்லி மற்றும் 5 மாநிலங்களில் காலியாக இருந்த 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் அசம்கர் ஆகிய மக்களவை தொகுதிகளும் அடங்கும். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சமாஜ்வாடியின் கோட்டையாக கருதப்படும் ராம்பூர் மற்றும் அசாம்கார் ஆகிய 2 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் முகமது அசிம் கானை பா.ஜ.க. வேட்பாளர் கன்ஷ்யாம் லோதி 42 ஆயிரம் வாக்குகளுக்கும் கூடுதல் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

அசம்கர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் நிராஹூவா, சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவை  8,679 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார். இது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் அரசு செய்த பணியே இந்த வெற்றிக்கு காரணம். குடும்பம்  மற்றும் வகுப்புவாத பதற்றத்தை தூண்டும்  சாதிய கட்சிகளை ஏற்க தயாராக இல்லை என  மக்கள் செய்தி அனுப்பியுள்ளனர் என தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் ராஜிந்தர் நகர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் துர்கேஷ் பதக், பா.ஜ.க. வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்கள் அவர்களின் (பா.ஜ.க.) கேவலமான அரசியலை தோற்கடித்து எங்களின் நல்ல பணியை பாராட்டினர். நன்றி ராஜீந்தர் நகர், நன்றி டெல்லி என தெரிவித்தார்.