கர்நாடக மேலவை உறுப்பினர் தேர்தல்.. பி.எஸ்.எடியூரப்பாவின் மகனுக்கு நோ சொன்ன பா.ஜ.க... புதிய முகங்களுக்கு வாய்ப்பு

 
பா.ஜ.க.

கர்நாடக சட்ட மேலவை தேர்தலில், முன்னாள் துணை முதல்வர் லஷ்மண் சவடி மற்றும் 3 புதுமுகங்களுக்கு பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை பா.ஜ.க. மேலிடம் புறக்கணித்து விட்டது. 

கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கு வரும் ஜூன் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலவை உறுப்பினர்கள் பதவிக்கு இந்த மாத தொடக்கத்தில் கர்நாடக பா.ஜ.க.வின் மையக் குழுவால் 15 பேரின் பெயர்கள் கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் கர்நாடக முன்னாள் முதல்வரும், லிங்காயத் சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. ஆனால், விஜயேந்திரரின் வேட்புமனு குடும்ப அரசியலுக்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாட்டுக்கு முரண்படுவதாக பா.ஜ.க. அண்மையில் தெரிவித்து இருந்தது.

பி.எஸ்.எடியூரப்பா

இதனால் பா.ஜ.க. சார்பாக மேலவை உறுப்பினர் பதவிக்கு விஜயேந்திரா தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேலவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று காலையில் பா.ஜ.க. தனது வேட்பாளர்களை அறிவித்தது. பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் லஷ்மண் சவடி, சலவாடி நாராயணசாமி, ஹேமலதா நாயக் மற்றும் கேசவபிரசாத் ஆகியோரின் பெயரை அறிவித்தது. எதிர்பார்த்தது போலவே விஜயேந்திராவை பா.ஜ.க. மேலிடம் புறக்கணித்து விட்டது.

விஜயேந்திரா

கர்நாடக சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் பி.எஸ்.எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜ.க. டிக்கெட் வழங்குவது குறித்து பா.ஜ.க. பரிசீலிக்கும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல்.