அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக ஆதரவு
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக தனது ஆதரவை அறிவித்திருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முடிவு எடுத்திருக்கிறார். இதை பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்திருக்கிறார்.
வரும் ஜூன் 10ஆம் தேதி அன்று 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கிறது . திமுகவிற்கு நான்கு இடங்கள் கிடைத்திருக்கும் நிலையில் திமுக சார்பில் மூன்று பேரும் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒரு இடத்தையும் திமுக ஒதுக்கியது.
அதிமுகவிற்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கும் நிலையில் இரு எம்பிக்களை பெறுவதற்கு போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிமுகவிற்கு இருக்கிறது என்ற நிலையிலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் சிவி சண்முகம், கேபி அன்பழகன், எம். சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்-ஐ சந்தித்து நேரில் கோரிக்கை வைத்துள்ளனர் .
அப்போது அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தையும் ராமதாஸிடம் அவர்கள் கொடுத்தனர். இதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என்று பாமக ஒருமனதாக முடிவு எடுத்தது. அந்த முடிவை பாமக தலைவர் ஜிகே மணி அறிவித்திருக்கிறார்.
பாமகவும் அதிமுகவிற்கு ஆதரவளித்திருப்பதால் அதிமுக சார்பில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வாவது உறுதியாகி இருக்கிறது .