காங்கிரஸ் வேட்பாளர் பரபரப்பு பேச்சு... காங்கிரஸ் கட்சி முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது... பா.ஜ.க. பதிலடி
நாட்டை முஸ்லிம் சமூகத்தினரால் தான் காப்பாற்ற முடியும் என்று காங்கிரஸ் பேசியதை குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சி முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது என பா.ஜ.க.வின் ஷெஹ்சாத் பூனவல்லா பதிலடி கொடுத்தார்.
குஜராத் மாநிலம் சித்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூர், அந்த தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், நாம் புதிதாக ஒன்றை செய்ய பா.ஜ.க.வுக்கு வாக்குகளை கொடுத்தோம், ஆனால் அவர்கள் முழு நாட்டையும் படுகுழியில் தள்ளினார்கள்.
யாரேனும் நாட்டை காப்பாற்ற முடியும் என்றால் அது முஸ்லிம் சமூகம்தான், காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடிந்தால் முஸ்லிம்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று சந்தன்ஜி தாக்கூர் பேசுவதை கேட்க முடிகிறது. காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூர் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா இது தொடர்பாக கூறியதாவது: INC என்பதின் விரிவாக்கம் எனக்கு வகுப்புவாதம் தேவை. காங்கிரஸ் முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சூரத் உள்பட 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.