தேர்தல் இந்து என்ற பட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமாக இருக்கும்.. கவுரவ் பாட்டியா தாக்கு
தேர்தல் இந்து என்ற பட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா
250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 7ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை அந்த கட்சி வெளியிட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய நபரான ராஜேந்திர பால் கவுதம் பெயர் இடம் பெற்றுள்ளதை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியை பா.ஜ.க. தாக்கியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியதாவது: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில், சமீபத்தில் மத மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால் டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜேந்திர பால் கவுதம் ஏன் இடம் பெற்றார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பினார்.
நீங்கள் (அரவிந்த் கெஜ்ரிவால்) வக்பு வாரியத்திற்கு ரூ.100 கோடி கொடுப்பீர்கள், மவுல்விகளுக்கு கொடுப்பனவு கொடுப்பீர்கள் ஆனால் யாராவது இந்துக்களை துஷ்பிரயோகம் செய்தால், நீங்கள் அவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக ஆக்குகிறீர்கள். மோசடி இந்து அல்லது தேர்தல் இந்து என்ற பட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமாக இருக்கும். இந்து விரோத கருத்துக்களை சொல்பவர்களை பாதுகாப்பது மறுபுறம் தன்னை ஹனுமான் பக்தர் என்று கூறி கொள்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.