பாஜகதான் என்னை கூப்பிடணும்..நான் போய் கேட்க முடியாது...எஸ்.வி.சேகர்

 
sn

பாஜக தான் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர நான் போய் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்க முடியாது என்றார் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் ஆலயத்தில் ராகவேந்திரரின் 351 வது ஆராதனை விழாவில் எஸ்.வி. சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   தேர் திருவிழா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ்.வி. சேகர் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

ann

அப்போது,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு,   ’’வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு 400 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும்.  தமிழகத்தில் நெகட்டிவாக  பேசியவரும் கட்சியினர் ஆச்சரியத்தில் வாயடைத்து நிற்பார்கள்’’என்றார்.

 பெரியார் சிலை விவகாரத்தில் கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தேடி வருவது குறித்த கேள்விக்கு ,  ’’கனல் கண்ணனுக்கு கருத்து சுதந்திரம் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் உண்டு.  உங்கள் கருத்தை மட்டும் தான் சொல்ல முடியும் என் கருத்தை சொல்ல உரிமை இல்லை என்று சொன்னால் அது கருத்து சுதந்திரம் இல்லை கருத்து திணிப்பு’’ என்றார் ஆவேசத்துடன்.

 பாஜகவில் தங்களுக்கு ஏன் முக்கிய பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை? என்ற கேள்விக்கு ,  ’’ ஊழலற்று  செயல்பட்ட என்னை பாஜக தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர நான் போய் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்க முடியாது.   சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அண்ணாமலை தன்னை பயன்படுத்திக் கொண்டால் மேலும் சிறப்பாக அவர் பணியாற்ற முடியும்’’ என்றார்.