அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு... இது அப்பட்டமான பொய், மக்களை தவறாக வழிநடத்தும்- பா.ஜ.க. விளக்கம்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால்  சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியாவை காப்பாற்றுவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது என்ற அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. 

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி எங்கள் கட்சிக்கு வந்தால் உங்களுக்கு டெல்லி முதல்வர் பதவி அளிக்கிறோம் என்ற பா.ஜ.க.வின் வாய்ப்பை மணிஷ் சிசோடியா நிராகரித்ததையடுத்து, பா.ஜ.க. என்னை அணுகியது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை என்றால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியா இருவரையும் விடுவிப்போம், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

சத்யேந்தர்  ஜெயின்

இதனை அவர்கள் (பா.ஜ.க.) என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. அவர்கள் (பா.ஜ.க.) நேரடியாக அணுகுவதில்லை. அவர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, அவரிடமிருந்து இன்னொருவருக்கு, அவரிடமிருந்து மற்றொருவருக்கு, அவரிடமிருந்து ஒரு நண்பரிடம் சொல்கிறாாகள். பின்னர் செய்தி உங்களை சென்றடைகிறது. குஜராத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்கள் இரண்டிலும் தோல்வியை கட்டு பா.ஜ.க. பயப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் பா.ஜ.க. எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சையத் ஜாபர் இஸ்லாம்

குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியாவை காப்பாற்றுவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது என்ற அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் கூறுகையில், இது அப்பட்டமான பொய். இது மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் பா.ஜ.க.வின் இமேஜைக் கெடுக்கும் அறிக்கை. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களையும், தேசத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார். ஆட்சிக்கு வர அன்னா ஹசாரேவைப் பயன்படுத்தி கொண்டார், பின்னர் அவரை விட்டு விட்டார். அவரால் யாரையும் தவறாக வழி நடத்தி ஆட்சியை பிடிக்க முடியும் என தெரிவித்தார்.