கனிமொழி, உதயநிதிக்கு பாஜக பதிலடி! ‘தமிழ்நாடு என்றும் இந்தியாவில் தான்.. ’

 
ka

இந்தியாவின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது மொழி வாரி மாநிலங்கள். தமிழ் நாடு என்றும் இந்தியாவில் தான் என்று கனிமொழிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.

 காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில்  ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.   அப்போது பேசியவர்,  தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.  எல்லாவற்றுக்கும் நாங்கள்  திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.   இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.   முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் .   ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன .  பாரதத்தின்  பகுதி  தமிழகம்.    பாரதத்தின் அடையாளம் தமிழகம் .  உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசியிருக்கிறார்.


தமிழ்நாடு என்கிற சொல்லை தவிர்த்து தமிழகம் என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.    இதை அடுத்து #தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்  டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 திமுக  எம்பி டி. ஆர். பாலு,  ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் , திமுகவின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு  என்பது எங்கள் உரிமை, உணர்வு.. முழுமுதற் சங்கியாகிய தங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை ராசா என்கிறார்.

u

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி,  ‘’நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம்  “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!’’என்கிறார்.

’’தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!’’என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதற்கு தமிழக பாஜக  துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ’’நம் பண்பாடு-கலாச்சாரம்-வாழ்வியலின் அடையாளம் 'இந்தியா'. சட்டமன்றத்தில் எந்த தீர்மானத்தை இயற்றினாலும் அதற்கு ஒப்புதல் அளிப்பது மத்திய அரசு. இது என்றும் இந்தியா தான்! இந்தியாவின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது மொழி வாரி மாநிலங்கள். தமிழ் நாடு என்றும் இந்தியாவில் தான்!’’என்கிறார்.