உன்மத்தன் கோமாளியா? உத்தமன் கோமாளியா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக கேள்வி
உன்மத்தன் கோமாளியா? உத்தமன் கோமாளியா? என்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது. கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என்று கேட்டதால் இந்த எதிர்கேள்வியை கேட்டிருக்கிறது பாஜக.
இன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது , அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள கேள்வி எழுப்ப, அந்த கோமாளியை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் . கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தை படிச்ச கோமாளி அண்ணாமலை. இந்த கோமாளியை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆகையால் அந்த கோமாளி சேர்ந்த கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். முதலமைச்சரின் செய்திகளை விட, சில கோமாளிகளின் செய்திகள் தான் ஒருசில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வருகிறது என்று ஆத்திரப்பட்டார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், ’’ஊழல் பேர்வழி, ஆள்கடத்தல் பேர்வழி, நில அபகரிப்பு மோசடி நபர், கேடு கெட்டவன் என்றெல்லாம் கழுவி கழுவி ஊற்றி விமர்சித்த நபரையே வெட்கம், மானம், சூடு, சொரணை என்ற எதுமேயில்லாமல் பதவிக்காக, பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்து தலைவராக ஏற்று கொண்ட உன்மத்தன் கோமாளியா? அல்லது ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சந்நிதியின் முன்பு நாட்டு மக்களின் நன்மைக்காக, அமைதிக்காக கந்த சஷ்டி கவசம் படித்த உத்தமன் கோமாளியா?’’ என்று கேட்டிருக்கிறார்.