ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் நுழைவதற்கு முன் மாநில மக்களிம் மன்னிப்பு கேட்க வேண்டும்... பா.ஜ.க. வலியுறுத்தல்
ராகுல் காந்தி மத்திய பிரதேசத்துக்கு வருவதற்கு முன், 2018ம் ஆண்டில் பொய் சொல்லி ஆட்சி அமைத்ததற்காக மாநில விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஒட்டு மொத்த பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் 20ம் தேதியன்று இந்திய ஒற்றுமை பயணம் மத்திய பிரதேசத்தில் நுழைகிறது.
மத்திய பிரதேசத்தில் கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா ஆகிய பகுதிகள் வழியாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செல்ல உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் நுழைவதற்கு முன் அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல் படேல் கூறியதாவது: ராகுல் காந்தி மத்திய பிரதேசத்துக்கு வருவதற்கு முன், 2018ம் ஆண்டில் பொய் சொல்லி ஆட்சி அமைத்ததற்காக மாநில விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஒட்டு மொத்த பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
2018ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி வந்தபோது, கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்வோம், இல்லையெனில் முதல்வரை மாற்றுவேன் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் கூறியதற்காக ராகுல் காந்தி மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தற்போது என்றென்றும் முடிவடைந்ததற்கு இதுதான் காரணம். காங்கிரஸ் இல்லாத இந்தியா ஊழலற்ற இந்தியா. ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை முடிந்து விட்டது. அதனால் அவர் என்ன செய்தாலும், அவரது வார்த்தைகளை யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.