நந்திகிராம் தொகுதியில் மம்தா கட்சிக்கு பெரிய அடி.. கூட்டுறவு தேர்தலில் பா.ஜ.க. வெற்றி

 
மம்தா

மேற்கு வங்கத்தில் நந்திகிராமில் கூட்டுறவு அமைப்புக்கான தேர்தலில் மொத்தமுள்ள 12 இடங்களில் 11ல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இது மம்தா கட்சியினருக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதி அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வுமான சுவேந்து ஆதிகாரியின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் போது, திரிணாமுல் காங்கிரஸின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் சுவேந்து ஆதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் சுவேந்து ஆதிகாரியிடம் மம்தா தோல்வி அடைந்தார்.

சுவேந்து ஆதிகாரி

கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும் நந்திகிராமில் மம்தா தோல்வி கண்டது அந்த கட்சிக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் நந்திகிராம்-2 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் 51 இடங்களில் வெற்றி பெற்றது. சி.பி.எம். ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் மம்தா கட்சி கோண்டாய் மற்றும் சிங்கூர் தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் உற்சாகம் அடைந்தது.

பா.ஜ.க.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு பெரிய அடியாக, நந்திகிராமில் கூட்டுறவு அமைப்புக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கூட்டுறவு அமைப்பான பெகுடியா சமாபாய் கிரிஷி சமிதியில் மொத்தமுள்ள 12 இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 11 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. எஞ்சிய ஒன்றில் தான் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது.