குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து 7 மாத குழந்தையை விலைக்கு வாங்கிய பா.ஜ.க. பெண் கவுன்சிலர்.. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

 
பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து 7 மாத ஆண் குழந்தையை விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் கவுன்சிலரை  கட்சியிலிருந்து பா.ஜ.க. இடைநீக்கம் செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாநகராட்சியில் 51வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பா.ஜ.க.வின் வினிதா அகர்வால் (வயது 52). இவரது கணவர் கிருஷ்ணா முரளி. வினிதா அகர்வால்-கிருஷ்ணா முரளி தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருப்பினும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் விருப்பப்பட்டனர். இதற்காக சிலரை அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

கடத்தல்காரர்கள்

இந்நிலையில், ஆகஸ்ட் 24ம் தேதியன்று மதுரா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் திருடிய 7 மாத குழந்தையை கடத்தல்காரர்கள் வினிதா அகர்வால் தம்பதியினரிடம் கொடுத்துள்ளனர். குழந்தைகக்காக வினிதா அகர்வால் தம்பதியினர் அவர்களுக்கு ரூ.1.80 லட்சம் வழங்கியுள்ளனர். இந்நிலையில், திருடப்பட்ட குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டனர். மேலும், வினிதா அகர்வால், அவரது கணவர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது

இதனையடுத்து வினிதா அகர்வாலை கட்சியிலிருந்து பா.ஜ.க. இடைநீக்கம் செய்தது. இது தொடர்பாக பிரோசாபாத் மாநகராட்சி பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சங்க்வார் கூறுகையில், 51வது வார்டு கவுன்சிலர் வினிதா அகர்வால்  கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.