இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஜெய் ராம் தாக்கூர் முதல்வராக வருவார்.. ஜே.பி.நட்டா உறுதி..

 
ஜே.பி. நட்டா

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஜெய் ராம் தாக்கூர் முதல்வராக வருவார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதியாக தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது சொந்த மாநிலம் இமாச்சல பிரதேசம். அம்மாநிலத்தில்  ஜே.பி. நட்டா தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். முன்னதாக ஜே.பி. நட்டா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் மும்முனைப் போட்டி என்று எதுவும் இல்லை. 

ஜெய் ராம் தாக்கூர்

ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டன. அவர்கள் 67 இடங்களுக்கு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மக்களுக்கு அவர்களின் உண்மை தெரியும். இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஜெய் ராம் தாக்கூர் முதல்வராக வருவார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் பா.ஜ.க. கவனம் செலுத்துகிறது. 

ஆம் ஆத்மி

எங்கள் கட்சி ஒழுக்கமான கட்சி, மக்கள் (26 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) எங்களை (பா.ஜ.க.) விரும்பி எங்களுடன் இணைகிறார்கள். காங்கிரஸை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தி விட்டு, இப்போது அதை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் கட்சி (பா.ஜ.க.) 24 மணி நேரமும் உழைக்க கற்றுக் கொண்டது. கல்வியை பற்றி பேசி மதுக் கொள்கை மோசடிகளில் இறங்குகிறாாகள். அவர்கள் (ஆம் ஆத்மி) விளம்பரங்களில் செழித்து, பல்வேறு வகையான மோசடிகளில் முடிவடைகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.