அறுத்தெறிவேன்னு கேவலமாக பேசுவோருக்கு அனுமதி.. தேச பக்திக்கு அனுமதி மறுப்பதேன்? பாஜக சரமாரி கேள்வி
பொது வெளியில் பெண்களை அருவருப்பாக ஆபாசமாக பேசும் திமுக பொது கூட்டத்திற்கு அனுமதியளிக்கும் காவல் துறை, பொது வெளியில் ஒரு சமுதாயத்தின் அடையாளத்தை அறுத்தெறிவேன் என்று கேவலமாக பேசும் சுப.வீரபாண்டியனின் அவதூறு பேச்சை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் காவல்துறை, பொது வெளியில் ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது கை கட்டி வாய் பொத்தி மௌனம் காக்கும் தமிழக காவல்துறை, தேச பக்தி, தெய்வ பக்தி, ஒழுக்கம், கட்டுப்பாட்டை போதிக்கும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் பேரணியை அனுமதிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக்கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் நாளை நவம்பர் 6ஆம் தேதி நடக்க இருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது ஆர். எஸ். எஸ் அமைப்பு.
இதுகுறித்து ஆர். எஸ். எஸ் அமைப்பின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், கடந்த 97 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகின்றோம். தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தி வருகின்றோம்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 50 இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தை நாடினோம். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கினை காரணம் காட்டி அணிவகுப்பை நவம்பர் 6ஆம் தேதி நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது .அ தை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். ஆனால் போலீசாரின் குறுக்கீட்டினால் நவம்பர் நாலாம் தேதி அன்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தினை உள்அரங்கில் நான்கு சுவர்களுக்குள் நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையது அல்ல .
காஷ்மீர், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் பொதுவெளியில் அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்க இருந்த அணிவகுப்பு ஊர்வலத்தினை ஒத்தி வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில்தான் நாராயணன் திருப்பதி, போலீசாருக்கு அந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.