திரிணாமுல் காங்கிரஸின் கனவை கலைத்த திரிபுரா... ஆம் ஆத்மி கட்சிக்கு ஷாக் கொடுத்த பஞ்சாப் இடைத்தேர்தல்

 
திரிணாமுல் காங்கிரஸ்

திரிபுராவில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

திரிபுராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டப்பேரவை தொகுதிகளில் டவுன் பர்தோவாலி, சுர்மா மற்றும் ஜூபராஜ்நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதேசமயம் அகர்தலா சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியையடுத்து திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வின் பலம் 36ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் திரிபுராவில் இடைத்தேர்தல் முடிவுகள்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு  பெரும் அடியாக அமைந்தது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் தடம் பதிக்கும் நோக்கில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மக்களளை தொகுதியில் இடைத்தேர்தலில் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் மான், ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மெயில் சிங்கை 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் தோல்வி, பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து சிம்ரஞ்சித் சிங் மான் டிவிட்டரில், நாடாளுமன்றத்தில் உங்கள் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்தற்காக சங்ரூர் வாக்காளர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள் எனது தொகுதியில் உள்ள அனைவரின் துன்பங்களையும் போக்க நான் கடுமையாக உழைப்பேன் என பதிவு செய்துள்ளார்.

ஆம் ஆத்மி

ஆந்திர பிரதேசத்தில் ஆத்மகுரு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் மேகபதி விக்ரம் ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பாரத் குமார் யாதவை 82,888 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்கே 23,157 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கோத்ரி குஜூரை தோற்கடித்தார்.