டெல்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் திடீர் திருப்பம்.. களத்தில் இறங்கிய பா.ஜ.க.

 
பா.ஜ.க.

பா.ஜ.க. சார்பில் டெல்லி மேயர் பதவிக்கு ஷாலிமார் பாக் கவுன்சிலர் ரேகா குப்தாவும், துணை மேயர் பதவிக்கு ராம் நகர் கவுன்சிலர் கமல் பக்ரியும் போட்டியிட உள்ளனர்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில்  ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ.க. 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. ஜனவரி 6ம் தேதியன்று டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி  மாநகராட்சி மேயர் பதவிக்கு ஷெல்லி ஒபராயும், துணை மேயர் பதவிக்கு ஆலி முகமது இக்பாலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி

அதேசமயம், பா.ஜ.க.வோ வெவ்வேறு நிகழ்வுகளில் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தது. அண்மையில் அமித் மால்வியா,டெல்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது போல் பேசியிருந்தார். அதிலிருந்து சில நாட்கள் கழித்து டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா பேட்டி ஒன்றில், தேர்தலில் வெற்றி பெற்றதால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரை மேயராக வருவார் என்றும், டெல்லி மாநகராட்சியில் பா.ஜ.க. வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.  இதற்கிடையே, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பா.ஜ.க. சுயேட்சை வேட்பாளரை தேர்தலில் நிறுத்த உள்ளது என்ற பேச்சு எழுந்தது. 

ரேகா குப்தா, கமல் பக்ரி

இந்த தகவலை குறிப்பிட்டு, பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராட வேண்டும். சுயேட்சை வேட்பாளரின் தோளில் துப்பாக்கியை வைப்பது இவ்வளவு பெரிய கட்சிக்கு பொருந்தாது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் டெல்லி மேயர் பதவிக்கு ஷாலிமார் பாக் கவுன்சிலர் ரேகா குப்தாவும், துணை மேயர் பதவிக்கு ராம் நகர் கவுன்சிலர் கமல் பக்ரியும் போட்டியிட உள்ளனர்.