இங்கு மட்டும் ‘குய்யோ முறையோன்னு’ பொங்குறீங்க... கேரளாவிலும் தான் தடை.. அங்கு ஏன் வாய்திறக்கல??.. பாஜக பிரமுகர் ட்வீட்..

கர்நாடகாவிப் போல் கேரளாவிலும் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் வாய்த்திறக்காமல் இருப்பது ஏன் என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் ஜிகாப் பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப் போன்ற உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அப்படி ஹிஜாப் அணிந்து வந்த மாணவர்களுக்கு வகுப்பறைகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் இஸ்லாமிய மாணவர்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை என்றும், அதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்களும் காவி துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ மாணவிகள் காவி துண்டும், துப்பட்டாவும் அணிந்து கல்லூரிகளுக்கு வந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் இருந்து வருகிறது. இதுகுறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் பல்வேறு அரசியல் தலைவர்கள் கனடனம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ தேசிய மாணவர் படையில் உள்ள இஸ்லாமிய பெண் மாணவிகள் 'ஹிஜாப்' அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று குறிப்பிட்டு கடந்த எட்டு நாட்களுக்கு முன் அனுமதி மறுத்துள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசு. அதன் உத்தரவில், "சீருடை என்பது' அனைவரும் ஒன்று' என்ற உடுப்பு நெறியை போதிக்கும் கண்ணியத்தை வெளிக்காட்டுவது" என்றும், பாலின, சாதிய, மத ரீதியான பாகுபாட்டை அகற்றும் என்பதோடு, மத ரீதியான பழக்க வழக்கங்களை சீருடையோடு தொடர்புபடுத்துவது மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் அதே போன்ற கோரிக்கைகளை வைக்க தூண்டுவதோடு, மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவித்து, மாணவ சமுதாயத்தின் ஒழுக்கத்தை சீரழிக்கும் என்று மறுத்துள்ளது.
ஆனால், இதே விவகாரத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் 'ஹிஜாப்' அணியும் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் 'குய்யோ முறையோ' என்று குரல் கொடுத்து, மத சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கப்படுவதாகவும், மத சுதந்திரத்தை நசுக்குவதாகவும் அலறுவது ஏன்? கேரளாவில் ஆட்சி இருப்பதால், அங்கு மதநல்லிணக்கத்தை பேணுபவர்கள், கர்நாடகாவில் ஆட்சி இல்லாததால் மத கலவரத்தை தூண்ட வெறி கொண்டு, சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயல்வது ஏன்? ” என்று குறிப்பிட்டுள்ளார்.