ராஜஸ்தானில் தண்ணீர் பாத்திரத்தை தொட்ட தலித் மாணவர் அடித்து கொலை.. வாய் திறக்காத ராகுல் காந்தி.. பா.ஜ.க. தாக்கு

 
ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் தலித் மாணவர் தண்ணீர் பாத்திரத்தை தொட்டதற்காக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, நாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து தெரிவித்து வரும் ராகுல் காந்தி அமைதியாக இருக்கிறார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் 8 வயது தலித் மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரின் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார். இதனையடுத்து அந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அந்த மாணவன் சிகிச்சை பலன் இன்றி கடந்த சனிக்கிழமையன்று உயிர் இழந்தார். இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் மாணவன் பலியானது தொடர்பான செய்தி

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் தலித் மாணவர் ஒருவர் தண்ணீர் பாத்திரத்தை தொட்டதற்காக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராகுல் காந்தி மவுனமாக இருப்பதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஓய் சத்ய குமார் டிவிட்டரில், தலித் மாணவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்தியை ஷேர் செய்து, இந்த சம்பவம் அவமானகரமானது. மாநிலத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமை சம்பவங்களை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

சதீஷ் பூனியா

நாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து தெரிவித்து வரும் ராகுல் காந்தி  அமைதியாக இருக்கிறார் என பதிவு செய்து இருந்தார். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ஒரு நபர் நிர்வாகத்திற்கு பயப்படாதபோது இது போன்ற செயல்களை செய்கிறார். இந்த எண்ணற்ற சம்பவங்கள் மாநில முதல்வரும் (அசோக் கெலாட்), உள்துறை அமைச்சரும் உதவியற்றவர்களாக இருப்பதை காட்டுகிறது. குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.