மக்கள் நல அரசாங்கத்தால் முதலாளித்துவத்தை ஒரு போதும் ஊக்குவிக்க முடியாது.. மோடி அரசை தாக்கிய வருண் காந்தி
மக்கள் நல அரசாங்கம், பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்தும் முதலாளித்துவத்தை ஒரு போதும் ஊக்குவிக்க முடியாது என மத்திய பா.ஜ.க. அரசை அந்த கட்சியின் எம்.பி. வருண் காந்தி மறைமுகமாக தாக்கினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நலிவடைந்த மற்றும் நஷ்டத்திலிருந்து மீள முடியாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.75 லட்சம் கோடி திரட்டும் மத்திய அரசின் இலக்கின் ஒரு பகுதியாக இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டி வரும் வேளையில், அந்த கட்சியின் எம்.பி.யான வருண் காந்தி, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது எதிராக குரல் கொடுத்துள்ளார். வருண் காந்தி சமீபகாலமாக, விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனியார்மயமாக்கல் தொடர்பாக வருண் காந்தி கூறியிருப்பதாவது, வங்கிகள் மற்றும் ரயில்வே மட்டுமே தனியார்மயமாக்கினால் 5 லட்சம் பணியாளர்கள் கட்டாய ஓய்வு பெற்றவர்கள் அதாவது வேலையில்லாதவர்களாக ஆக்குவார்கள். ஒவ்வொரு வேலை முடிவடையும்போதும், லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கைகள் இழக்கப்படுகின்றன. சமூக மட்டத்தில் பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குவதன் மூலம் ஒரு மக்கள் நல அரசாங்கம் முதலாளித்துவத்தை ஊக்குவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.