உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை கல் வீச்சு நடந்தால், சனிக்கிழமை புல்டோசர்கள் இயங்கும்... பா.ஜ.க. எம்.பி.

 
புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு

உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் கல் வீச்சு நடந்தால், சனிக்கிழமைகளில் புல்டோசர்கள் இயங்கும் என போராட்டக்காரர்களுக்கு பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். பிரயாக்ராஜ் நகரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிரயாக்ராஜ் வன்முறை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமது உள்பட  60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

கல் வீச்சு சம்பவம்

இந்நிலையில், கடந்த சில தினஙகளுக்கு முன் பிரயாக்ராஜ் வன்முறையில் முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமதுவின் 2 மாடி குடியிருப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்நகர மேம்பாட்டு ஆணையம் இடித்தது. ஜாவேத் முகமதுவின் குடியிருப்பு இடிக்கப்பட்டதற்கு அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாநிலத்தில் வெள்ளிக்கிழமைகளில் கல் வீச்சு நடந்தால், சனிக்கிழமைகளில் புல்டோசர்கள் இயங்கும் என போராட்டக்காரர்களுக்கு பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

சாக்ஷி மகராஜ்

பா.ஜ.க. எம்.பி.  சாக்ஷி மகராஜ் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் கல் வீச்சு நடந்தால், சனிக்கிழமைகளில் புல்டோசர்கள் இயங்கும். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டால் இது போன்ற நடவடிக்கை தொடரும். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் இல்லையென்றால், நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.