நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸின் டவுசரை அகற்றி விட்டனர்... பா.ஜ.க. எம்.பி. கிண்டல்

 
பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் ஜிகஜினகி

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக டவுசர்கள் எரிக்கப்படும் என்ற காங்கிரஸின் பேச்சுக்கு, நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸின் டவுசரை அகற்றி விட்டனர் என பா.ஜ.க. எம்.பி. கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி பாடப்புத்தகங்கள் காவிமயமாக்க படுவதாக குற்றம்சாட்டி மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் கடந்த 1ம் தேதியன்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் வீட்டு முன் ஒரு ஜோடி காக்கி டவுசரை எரித்தனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் டவுசர் விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.

காக்கி டவுசரை எரித்த காங்கிரஸார்

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக டவுசர்கள் எரிக்கப்படும் என தெரிவித்தார். சித்தராமையாவின் சர்ச்சைக்குரிய கருத்தையடுத்து, காங்கிரஸ் அலுவலகத்துக்கு டவுசர்களை அனுப்ப ஆர்.எஸ்.எஸ். பொதுமக்களிடம் டவுசர்களை சேகரிக்க தொடங்கியது. இதனால் அந்த மாநிலத்தில் டவுசர் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டவுசர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் ஜிகஜினகி குதித்துள்ளார். 

சித்தராமையா

டவுசர் விவகாரம்  தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் ஜிகஜினகி கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸின் டவுசரை அகற்றி விட்டனர். எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மாநில மக்கள் காங்கிரஸின் டவுசரை அகற்றுவார்கள். இதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் டவுசரை பற்றி பேசி வருகின்றனர். நீங்கள் ஏன் டவுசரை மட்டும் பார்க்கிறீர்கள்? நீங்கள் வேறு எதையும் பார்க்கவில்லையா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.