குறைவாக வேலை செய்கிறார், அதிகமாக பேசுகிறார்... முன்னாள் முதல்வரை குற்றம் சாட்டிய பா.ஜ.க. எம்.பி.

 
பிரதாப்ராவ் சிக்கலிகர்

குறைவாக வேலை செய்கிறார், அதிகமாக பேசுகிறார் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அசோக் சவானை பா.ஜ.க. எம்.பி. பிரதாப்ராவ் சிக்கலிகர் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்தெட் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் பிரதாப்ராவ் சிக்கலிகர். நான்தெட் மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியான நான்தெட்டின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் அசோக் சவான். இவர் வேலை குறைவாக செய்கிறார் ஆனால் அதிகமாக பேசுகிறார் என பா.ஜ.க. எம்.பி. பிரதாப்ராவ் சிக்கலிகர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதாப்ராவ் சிக்கலிகர். கூறியதாவது: அவருடைய (அசோக் சவான்) பெயரை கூட நான் எடுக்க தேவையில்லை, அது அவர் பழக்கம். அவர் குறைவாக வேலை செய்கிறார், அதிகமாக பேசுகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் எதுவும் செய்யவில்லை. அசோக் சவானின் தொகுதி பள்ளங்களால் நிரம்பியுள்ளது. முந்தைய மகா விகாஸ் அகாடி அரசாங்கமும், பொதுப்பணித்துறையும் நான்தெட்டில் உள்ள பள்ளங்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த தொகுதி பரிதாபகரமான நிலையில் உள்ளது. 

அசோக் சவான்

மக்கள் தன்னை தோற்கடித்தனர் என்பதை உணரமால் நான் தான் அவரை தோற்கடித்தேன் என்று நினைக்கிறார், அன்றிலிருந்து அவர் அதை மிகவும் தனிப்பட்டதாக ஆக்கியுள்ளார். நான்தெட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, எனது பகுதியை பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவது எனது பொறுப்பு. எம்.பி.யாக நான் எனது பணியை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். ஆனால் நான்தெட்டில் உள்ள பள்ளங்களை மாநில அரசு நிரப்ப வேண்டும். இவை மாநில அரசின் கீழ் உள்ள சாலைகள். அசோக் சவானை அணுகி ஒருங்கிணைந்து பணியாற்ற முயற்சித்தேன் ஆனால் எனது முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டது. எதிர்க்கட்சிகளுக்கு அவர் மரியாதை கொடுப்பதில்லை. அதனால்தான் அவருடைய எந்த கூட்டத்திலும் நான் கலந்து கொள்வதில்லை. 

பா.ஜ.க.

ஆனால் இப்போது நான்தெட் மக்களை கஷ்டப்பட விடமோட்டோம். மாற்றங்களை கொண்டு வர தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை விடுப்போம். அவுரங்கபாத்தை சம்பாஜி நகர் என மாற்ற முடிவு செய்யப்பட்டபோது அசோக் சவான் அமைச்சரவையில் இருந்தார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வரவில்லை. அதனால் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர் தொடர்ந்து பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். இது தொடர்ந்தால் நான் அவரை சென்று சந்திப்பேன் என்று நினைக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அவர் மட்டுமல்ல நந்தேட்டின் 4 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர் தொடர்ந்து ஒத்துழைக்கிறாரா என்று பார்ப்பேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.