சஜி செரியன் மீண்டும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.. பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்
அரசியலமைப்புக்கு எதிராக பேசியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சஜி செரியன், நேற்று மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், அவர் மீண்டும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சஜி செரியன். இவர் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். 2022 ஜூலை மாதத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் சஜி செரியன் பேசுகையில், ஆங்கிலேயர்கள் அதை (அரசியலமைப்பை) தயாரித்தனர். இந்தியர்கள் அதை எழுதி செயல்படுத்தினர். இந்தியா கொள்ளையடிக்கக் கூடிய அழகான அரசியல் சட்டத்தை எழுதியது. அந்த அரசியல் சாசனத்தில், மதச்சார்பின்மை, ஜனநாயகம் பற்றி குறிப்பிடும் சில இடங்கள் உள்ளன, ஆனால் அது சுரண்டப்படலாம் என தெரிவித்தார். அரசியலமைப்புக்கு எதிராக அவரது சர்ச்சைக்குரிய கருத்து பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சஜி செரியன் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அண்மையில் சஜி செரியனை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் பினராயி விஜயன் கவர்னரிடம் பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கேரள கவர்னர் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்க ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சஜி செரியனுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசாங்கத்தின் முடிவை (சஜி செரியன் அமைச்சரவையில் சேர்ப்பு) பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக தாக்கினார். பிரகாஷ் ஜவடேகர் இது தொடர்பாக கூறியதாவது: அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதியளித்த ஒரு அமைச்சர், அரசியலமைப்பை அவமதித்து, பின்னர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவதை நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். முதல்வர் பினராயி விஜயன் என்ன செய்கிறார் என்பதை மக்கள் அறியும் வகையில் எம்.எல்.ஏ. செரியனின் வீடியோவை வைரலாக்க வேண்டும்.
அரசியலமைப்பு குறித்த அவரது அறிக்கைகளை நான் கண்டிக்கிறேன். நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டுள்ளார். வீடியோ இருந்தது, ஆனால் இன்னும், போலீசார் அவருக்கு ஒரு நற்சான்றிதழ் கொடுத்தனர். சஜி செரியன் மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம். மது, போதைப்பொருள், லாட்டரி, குற்றம் மற்றும் கடத்தல் இவையே இந்த அரசாங்கத்தின் ஐந்து முக்கிய ஆயுதங்கள். இந்த அரசு கேரளாவை அழித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.