ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் புதிய முகமூடியுடன் வந்துள்ளனர்.. ஆம் ஆத்மியை தாக்கிய பா.ஜ.க. எம்.பி.

 
ஆம் ஆத்மி

ரூபாய் நோட்டில் லெட்சுமி மற்றும் கணேஷ் படங்களை பிரிண்ட் செய்ய வேண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை குறிப்பிட்டு, ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் புதிய முகமூடியுடன் வந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தாக்கினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூபாய் நோட்டில் லெட்சுமி மற்றும் கடவுள் படங்களை பிரிண்ட் செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். மேலும், மனிதனின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், கடவுள்கள் நம்மை ஆசிர்வதிக்காவிட்டால், நமது முயற்சிகள் வெற்றியடையாது. இந்தோனேஷியா முஸ்லிம் நாடு ஆனாலும் அந்நாட்டின் கரன்சியில் கடவுள் கணேஷ் படம் இடம் பெற்றுள்ளது. இந்தோனேஷியாவால் முடியும்போது ஏன் நம்மால் முடியாது? புதிய நோட்டுகளில் படங்களை அச்சிடலாம்.

அரவிந்த் கெஜ்ரிவால்

நமது நாணயத்தில் லெட்சுமி-விநாயகர் உருவம் இருந்தால் நம் நாடு செழிக்கும். இது குறித்து ஒரிரு நாட்களில் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் இப்போது யு-டர்ன் எடுக்கிறது. அயோத்தி ராமர் கோயிலில் செய்யப்படும் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்கமாட்டார் அதனால் அங்கு செல்லமாட்டேன் என்ற அதே மனிதர்தான், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் பொய் என்றும் சிரித்த அதே மனிதர்தான் அவர் என்று தெரிவித்தார்.

மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், ஆம் ஆத்மி அமைச்சர், குஜராத் ஆம் ஆத்மி தலைவர் மற்றும் தலைவர்கள் இந்துக் கடவுள்களை அவதூறாகப் பேசியும், பல விஷயங்களை கூறியும்  அவர்கள் கட்சியில் உள்ளனர். தேர்தலில் தங்களது முகத்தை காப்பாற்ற புதிய யுக்தியை கொண்டு வருகிறார்கள். ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் புதிய முகமூடியுடன் வந்துள்ளனர் என தெரிவித்தார்.