ஏழைகளுக்கு இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படுவதால் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.
இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படுவதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசுகையில் கூறியதாவது: நாடு கடந்த 14 மாதங்களில் இரட்டை இலக்க பணவீக்கத்தை பதிவு செய்து வருகிறது. இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவு.
நுகர்வோர் உணவு விலை குறியீடு விண்ணை தொடுகிறது. அன்றாட உபயோகப் பொருட்களான அரிசி, தயிர், பன்னீர் மற்றும் பென்சில்கள் மற்றும் கட்டர்கள் மீதான ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்கம் குழந்தைகளை கூட விடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பணவீக்கம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே பதிலடி கொடுத்தார்.
பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் பேசுகையில், இலங்கை, வங்கதேசம், பூடான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வேலையிழப்பு ஏற்பட்டு வரும் வேளையில், இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படுவதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.